“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!
மத்திய அமைச்சர் பொய் கூறுகிறார். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தற்போது பேசுபொருளாகி உள்ளது மட்டுமின்றி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு யூ-டர்ன் :
இன்று கேள்வி பதில் நேரத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ” முதலில் PM Shri திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு, கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் திமுகவினர் நாகரிகமற்றவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள்” என கடுமையாக விமர்சனம் செய்தார்.
முதலமைச்சர் கண்டனம் :
“தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என பேசியது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்பதால் அவருக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்படும்” என திமுக எம்பி கனிமொழி முன்னதாக தெரிவித்து இருந்தார். மத்திய அமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் வேண்டுமென கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
கனிமொழி எம்.பி பேட்டி :
இந்த விவகாரம் குறித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, ” இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், பதில் அளிக்கும் சந்தர்ப்பத்தில், அவர் மிக மோசமாக, தமிழ்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை பார்த்து தனிப்பட்ட வகையில் ‘காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்’ எனும் அளவுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நாங்கள் பொய் கூறுவதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் வாக்கு தவறுகிறார் என உண்மைக்கு புறம்பான செய்தியை அவையை திசை திருப்பும் நோக்கில் முன்வைத்துள்ளார். தமிழ் மக்களின் கோரிக்கையை நியாயமான முறையில் அவையில் கேட்டதற்கு, மத்திய அமைச்சர் புண்படுத்தும் வகையில் பேசியது கண்டிக்கத்தக்கது. அவையில் அவர் பேசியிருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்தி இருக்கிறது. இதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
நாங்கள் சொல்லவே இல்லை
அவையில் எம்பிக்கள் அவரை சந்தித்தபோது நாங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதாக ஒரு பொய் பிரச்சாரத்தை செய்கிறார். எந்த நேரத்திலும் நானோ, தமிழ்நாடு எம்பிக்களோ தமிழ்நாடு மும்மொழி கொள்கையையோ, புதிய கல்வி கொள்கையையோ ஏற்றுக்கொள்ளும் என தெரிவிக்கவே இல்லை. அதைத்தாண்டி முதலமைச்சர் இதனை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் இன்னொரு கருத்தை முன்வைத்துள்ளார். நம்முடைய முதலமைச்சர் எந்த காலத்திலும் அப்படியான கருத்துக்களை சொல்லவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதற்கு சாட்சியாக முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மிக தெளிவாக எழுதியுள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று.
கல்விக்கான நிதியை பிடித்துவைத்துக்கொண்டு மாணவர்கள் பாதிக்கும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தக் கூடாது. இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை முதலமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார். இப்படியான சமயத்தில் முதலமைச்சர் கூறியதாக தவறான விஷயத்தை சொல்வது கண்டிக்கத்தக்கது. அவைத்தலைவர் (மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா) நியாயமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல், அமைச்சருக்கு மட்டுமே அனுமதி அளிப்பது வருந்தத்தக்கது.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது
தமிழக கல்விக்கு தர வேண்டிய ரூ.2 ஆயிரம் கோடி என்பது பட்ஜெட்டில் உள்ளது. கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. இப்படியான சூழலில் அமைச்சர் பேசுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வி குறித்த முடிவுகளை மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் முடிவு எடுக்க முடியாது. மற்ற மாநிலங்களில் ஏற்றுக்கொண்டார்கள் எனக் கூறி தமிழகத்தை ஏற்றுக்கொள்ள கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒன்று என திமுக எம்பி கனிமொழி பேசியுள்ளார்.