திமுக எம்பி ஆ.ராசாவின் இடத்திற்கு அமலாக்கத்துறை சீல்!
திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்குவதாக நேற்று அமலாக்கத்துறை தெரிவித்தது. கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஆ.ராசாவின் பினாமி எனக்கூறி சொத்துக்களை முடக்கியுள்ளதாக X தளத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துக்கள் பினாமி பெயரில் நடத்தி வந்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதன்படி, சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டப்படி, திமுக எம்பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்பி ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கில், 2002 சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், சொத்துக்கள் முடக்கப்பட்டதை தொடர்ந்து கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள ஆ.ராசா எம்பியின் இடத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது. அதன்படி, ரூ.5.85 கோடி மதிப்புள்ள 47 ஏக்கர் இடத்திற்கு சீல் வைக்கப்படுவதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டியுள்ளது.