திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு.! சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்.!
- திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார். இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். பின்னர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் சோதனை நடத்தினர். இதையடுத்து மத்திய குற்றபிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
பின்பு இவருக்கு சென்னை உயர்நீதிமன்றம், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும், செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட்டை காவல்துறையிடம் ஒப்படைக்கவும், மற்றும் தினமும் கையெழுதியிடவும் நிபந்தனை விதித்தது உயர்நீதிமன்றம். இந்த நிலையில் வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி வியாழக்கிழமை நேரில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.