அந்த சாரை காப்பாற்ற தான் திமுக அமைச்சர்கள் குரல் கொடுக்கிறார்கள்! எடப்பாடி பழனிசாமி பேச்சு !
மாணவியை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் உண்மை குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதற்காகவே அஇஅதிமுக போராட்டம் நடத்தி வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கோட்டூர்புரம் மகளிர் காவல்நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்தனர். தற்போது அவரிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தின் போது ஞானசேகரன் தன்னுடைய போனில் சார் என்று யாரோடு பேசிக்கொண்டு இருந்ததாக மாணவி தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த சார் என்று யாரும் இல்லை மாணவியை மிரட்டுவதற்காக ஞானசேகரன் அப்படி கூறியதாக காவல்துறை தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் யார் அந்த சார் என சமூக வலைத்தளங்களில் எழுந்த கேள்வி இன்னும் ஓய்ந்தபாடு இல்லை.
குறிப்பாக, தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யார் அந்த சார் அவரும் திமுகவுக்கு வேண்டியவரா? என கேள்விகளை எழுப்பி கொண்டு வருகிறார். அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” அந்த சார் யார் என்று நாங்கள் புகார் அளிக்கவில்லை. பாதிக்கப்பட்ட அந்த பெண் தான் சார் என்று ஒருவரிடம் கைது செய்யப்பட்ட குற்றவாளி பேசியதாக கூறினார்.
எனவே, அது குறித்து விரிவான விசாரணை நடந்த பிறகு தானே விளக்கம் அளிக்கவேண்டும். விசாரணை நடத்தாமல் ஒருவர் தான் இதில் குற்றவாளி என்று சொல்வது தான் சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, உண்மையான குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கவேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை. இந்த சம்பவத்தில், திமுகவை சேர்ந்தவர் சம்பந்தப்பட்டு இருப்பதால் தான் சார் என்று யாரும் இல்லை என கூறி அந்த நபரை காப்பாற்ற திமுக அமைச்சர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
குறிப்பாக, உயர் கல்வி துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், மகளிர் துறை அமைச்சர் ஆகியோர் சார் என்று யாரும் இல்லை என பேசுகிறார்கள். இவ்வளவு பேரும் பேசுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யாரோ ஒருவர் இவர்களுக்கு வேண்டியபட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தி இருப்பதன் காரணமாக தான் இன்று இவ்வளவு அமைச்சர்களும் பேசுகிறார்கள்.
எங்களை பொறுத்தவரையில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சரியான நீதி கிடைக்கவேண்டும். அந்த சார் என்றால் யார் என்பதை விசாரணை செய்து அவரையும் உடனடியாக கைது செய்யவேண்டும். அதனால் தான் போராட்டம் நடக்கிறது. இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் நிற்காது” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.