பொதுமக்களுக்கு ரூ.5000 மற்றும் கொரோனா தடுப்பு பணியாளர்கள் அனைவருக்கும் சிறப்பு ஊதியமாக ரூ.5000 வழங்க வேண்டும்… திமுக தலைவர் தமிழக முதல்வருக்கு வலியுறுத்தல்…
அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோயைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நோய்த்தடுப்புப் பணிக்கு முகக்கவசங்கள், மருத்துவப் பணியாளர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள், தெர்மல் ஸ்கேனர்கள் உள்ளிட்ட தேவைப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் உடனே கலந்தாலோசித்து, அவர்களுக்கு உதவிடும் வகையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது நாடாளுமன்ற சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், அதிமுக அரசைப் பொறுத்தவரை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் 1000 ரூபாய்’, ‘கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு மட்டும் 1000 ரூபாய்’ என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்றும், அவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்னைகளை இந்த அரசு சரியான முறையில் அணுகவில்லை.ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தால்தான் கொரோனா நோயை உறுதியுடன் தடுக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, அரசின் ‘தனிமைப்படுத்துதல்’ முயற்சி வெற்றி பெற அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் குறைந்த பட்சம் ரூபாய் 5000 நிதியுதவியாவது வழங்கிட வேண்டும் என்றும், அதை அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேராக அனுப்பிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல், தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொடிய கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், துப்பரவு பணியாளர்கள், 144 தடையுத்தரவை அமல்படுத்தும் சீர்மிகு காவல்துறையினர் ஆகியோருக்கு தலா 5000 ரூபாய் சிறப்பு ஊதியமாக வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்வதுடன், ‘ஊரடங்கு பிறப்பித்து விட்டோம். எல்லாம் முடிந்து விட்டது’ என்று அமைதியாக இருக்காமல், மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் தாமதமின்றி நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கொரோனா நோய்த் தடுப்பில் பொதுமக்களின் பங்களிப்பு முழு அளவில் இருப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கிட வேண்டும் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.