இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்திக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைக்கும் உரிமையைப் பெறவுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதற்கான வாக்குஎண்ணும் பணியானது மே 2 ஆம் தேதி நடந்தது.இதில்,திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது.எனவே,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்பது உறுதியானது.
ஆனால் இந்தப் பதவியேற்புக்கு முன்னர்,கூட்டம் கூட்டி திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.
அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில்,நேற்று மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திமுக தலைமைச் செயலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு ஒருமனதாக ஸ்டாலினை சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்தனர்.
இதனையடுத்து ஸ்டாலின்,ஆதரவு பெற்ற உறுப்பினர்களின் கடிதங்களுடன் இன்று காலை 10 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையைப் பெறவுள்ளார்.