திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் -மு.க.ஸ்டாலின்
பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் நீட் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று திருவள்ளூர் – சென்னை ஆகிய மாவட்டங்களில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த வகையில் திருத்தணி தொகுதி அம்மையார்குப்பம் ஊராட்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது அவர் பேசுகையில்,நான் தொடர்ந்து அனைத்துக் கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கலைஞர் முதலமைச்சராக இருந்த வரையில் நீட் தமிழ்நாட்டிற்குள் வரவில்லை. ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனதும் நீட் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்டது. இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த நீட்டிலிருந்து விலக்கு வாங்கி தருவேன் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.