சர்ச்சை பேச்சு எதிரொலி! பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிப்பு!
அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து அமைச்சர் பொன்முடியை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார். அதில், சைவம் , வைணவம் , உடலுறவு என மறைமுகமாக மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியது.
இதற்கு மாற்று கட்சியினர் மத்தியில் மட்டுமல்ல, சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், திமுக கட்சியில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த அமைச்சர் பொன்முடி இன்று முதல் அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அதில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுக துணை பொதுச்செயலாளர்களாக கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், ஐ.பெரியசாமி ஆகியோர் தற்போது பொறுப்பில் உள்ளனர்.