ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு எதிரான போரில் செய்தித்தாள்,காட்சி,ஒலி ஆகிய ஊடகங்களில் பணிபுரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று வருகின்ற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் இருப்பது ஊடகத்துறையே.ஏனெனில்,கடுமையான மழை மற்றும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தலையாய கடமையை ஊடகத்துறையினர் செய்து வருகின்றனர்.
மேலும், தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்றிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி – ஒலி ஆகிய ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர்.எனவே,ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். அதுமட்டுமல்லாமல்,முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள், சலுகைகள் அனைத்தும் ஊடகத்துறையினருக்கும் உரிய முறையில் வழங்கப்படும்”,என்று அறிவித்துள்ளார்.