‘அஜித் கிடைக்கமாட்டாரானு திமுக முயற்சி செய்கிறது’ – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா!
விஜய் எப்படி பாஜகவின் B டீமாக இருக்க முடியும் என பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.
சென்னை : கடந்த அக்-27ம் தேதி தவெகவின் முதல் மாநில மாநாடானது பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் விஜய் திமுகவையும், திமுக ஆட்சியையும் விமர்சனம் செய்து பேசினார். இதற்குப் பதிலடியாக திமுக தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது.
குறிப்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘திமுக ஆலமரம் போன்றது’ எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இது குறித்து துணை முதல்வர் உதயநிதியிடம் கேட்ட போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் தனது கார் ரேஸிங் நிறுவனத்தில் உள்ள ரேஸிங் கார் மற்றும் மற்ற உபகரணங்களில் SDAT எனும் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் சின்னத்தைக் குறிப்பிட்டு இருந்ததற்கு வாழ்த்துக்களுடன் நன்றி தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தச் செயலை அப்போது, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘விஜயை கோபப்படுத்தவா உதயநிதி அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்?’ எனக் கூறியிருந்தார். தற்போது இதைக் குறித்தும், விஜயை பாஜகவின் B டீம் என திமுக கூறுவது குறித்தும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திமுகவை விமர்சித்துப் பேசி இருக்கிறார்.
இது குறித்து தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இவர், “விஜய் எப்படி பாஜகவின் B டீமாக இருக்க முடியும். ஒரு காலத்தில் சீமானை பாஜகவின் B டீம் எனக் கூறினார்கள். தற்போது விஜயைக் கூறுகிறார்கள், போதும் பாஜக தாங்காது. விஜய் மேடையில், ஒன்றிய அரசு என்று கூறிய போதே அவர் உங்கள் சித்தாந்தம் தான். ஒரு குடும்பத்தை எதிர்ப்பதைத் தாண்டி விஜய் புதிதாக ஒன்றும் கூறவில்லை”, என எச்.ராஜா கூறியிருந்தார்.
மேலும், பேசிய அவர், “அதே போல, தண்ணீரில் உயிருக்குத் தத்தளிக்கும் மனிதனைப் போல திமுக நடிகர் அஜித் கிடைக்கமாட்டாரா? அவரது ஆதரவு கிடைக்காதா? என முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால், இது குறித்து அஜித் தான் முடிவு செய்ய வேண்டும்”, என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.