எமர்ஜென்சியையே கண்ட இயக்கம் திமுக..! சலசலப்புக்கு அஞ்சாது..! – அமைச்சர் கே.என்.நேரு
எமர்ஜன்ஸியையே கண்ட இயக்கம் திமுக; சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நேற்று தஞ்சை ஜூபிடர் தியேட்டர் – பனகல் பில்டிங் அருகில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மூத்த தலைவர் கணேசன் உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள், தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில் கை வைப்போம் என்றும், அவர்கள் செய்யும் துரோகத்தை பட்டியலிட்டு பதிலடியை சம்மட்டி அடி போல கொடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், எமர்ஜன்ஸியையே கண்ட இயக்கம் திமுக; சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது; தவறு செய்தால் தான் பயம் தேவை என தெரிவித்துள்ளார்.