திமுகவினர் பச்சை பொய்யை கூறி வருகிறார்கள் – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
இந்த 4 மாத காலத்தில் திமுக அரசு எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் ஊரக உள்ளாட்சி நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக சார்பில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். அந்தவகையில் , இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது 525 அறிவிப்பில் ஒருசில அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக தலைவர் முக ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று ஒரு பச்சை பொய்யை கூறி வருகிறார்கள்.
இந்த 4 மாத காலத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதற்காக முதல் கையெழுத்து போடப்படும் என்று முக ஸ்டாலின் கூறினார். ஆனால், அது நடக்கவில்லை, இதுபோன்று பல திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளன என விமர்சித்து பேசியுள்ளார்.