நீட் தேர்வுக்கு எதிராக போராட திமுகவுக்கு தகுதியில்லை.! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்.!
இன்று சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து திமுக ஆர்ப்பாட்டம், அதிமுக பொதுக்குழு என பல்வேறு நிகழ்வுகள் குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டார்.
அவர் கூறுகையில், அதிமுக மாநாடு மதுரையில் பிரமாண்டமாக வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் வரும். 10 லட்சம் பேர் வருவார்கள் இதனை பொறுத்து கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் அன்றைய தினமே (ஆகஸ்ட் 20) திமுகவினர் உண்ணாவிர போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அன்றைய தினம் அதிமுக பொதுக்குழு பற்றி யாரும் பேசிவிட கூடாது என்பதற்காக தான் திமுக அதே தேதியில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவுள்ளனர். என ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
எங்கள் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதுவே அவர்கள் (திமுக) பேனர் வைக்க அனுமதி வழங்கபடுகிறது. பொள்ளாச்சியில் அதிமுக சார்பாக பலூன் பறக்கவிட்டதற்கு வழக்குப்பதிவு செய்கிறார்கள். இதெற்க்கெல்லாம் நாங்கள் பணிந்துவிட மாட்டோம். திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக நாங்கள் (அதிமுக) இருக்கின்றோம். என ஜெயக்குமார் தெரிவித்தார்.
அடுத்து , நீட் தேர்வு பற்றி பேசிய ஜெயக்குமார், நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை. அவர்களது ஆட்சி காலத்தில் தான் கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதனை செய்யாமல் இருந்து இருந்தால் இந்நேரம் நீட் தொல்லையே தமிழகத்திற்கு இருந்து இருக்காது.
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் எனும் சுவர் தகர்க்கப்படும் கூறுகிறார். நீட் தேர்வு தோல்வியால் ஒரு மாணவர் மற்றும் அவரது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது அந்த மாணவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர் உதயநிதி நிற்கிறார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழல் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுக ஈடுபடுகிறது. ஆனால் இனி மக்கள் உங்க்ளை (திமுக) நம்பமாட்டார்கள் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.