திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது.. திசை திருப்பவே சோதனை – ஆர்எஸ் பாரதி பரபரப்பு பேட்டி!
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜக அமலாக்கத்துறையை ஏவி வருகிறது என ஆர்எஸ் பாரதி பேட்டி.
சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் அமைச்சர் பொன்முடி வீட்டின் வெளியே செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பராதி, ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. அமைச்சர் பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. சட்ட ஆலோசனை வழங்குவதற்காக கூட யாரையும் சந்திக்க விடவில்லை என குற்றசாட்டியுள்ளார்.
அமலாக்கத்துறை தொடர்ந்து எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இதுபோன்ற நடவடிக்கை எடுத்தால், கர்நாடகாவில் பாஜகவுக்கு என்ன ஏற்பட்டதோ அதுவே மற்ற மாநிலங்களிலும் நடக்கும். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற அடுத்த நாளே அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று பெங்களுருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனையாகும்.
பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு பின் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக பங்கிருப்பதால் மத்திய அரசு பல்வேறு நெருக்கடி கொடுக்கிறது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே, திமுக எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது என தெரிவித்தார்.