இந்தியில் சி.ஆர்.பி.எப் பணியிட தேர்வு.! 17ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்.!
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே சி.ஆர்.பி.எப் பணியிட தேர்வு நடைபெறுவதை எதிர்த்து வரும் 17ஆம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்ட ஒழுங்கை பாதுக்காக்க மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் உபயோகப்படுத்தப்படுகின்றனர். இந்த துறையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் துறையாகும். தற்போது சிஆர்பிஎப்-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிஆர்பிஎப் தேர்வு :
இந்தியா முழுக்க 9,223 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் 579 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக்தில் 12 மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 25 வரையில் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முறை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே நடைபெறும் .
முதல்வர் கடிதம் :
இந்தியா முழுக்க நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெறுவதால், ஹிந்தியில் பயிலும், ஹிந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் பிரதான மொழியில் தேர்வு எழுதுவைதால் அது அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும். சம வாய்ப்பு இதில் இல்லாமல் போய் விடும் என குறிப்பிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ஆங்கிலம் , ஹிந்தி தவிர்த்து மற்ற மாநில பிரதான மொழியிலும் தேர்வு வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழில் இந்த தேர்வை எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
உள்துறை மறுப்பு .?
ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கை ஏற்படவில்லை என்றும் , வழக்கம் போல ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் சிஆர்பிஎப் தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சகத்திடம் இருந்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்ததாக கூறப்பட்டது. தேர்வு முறையில் மாற்றமில்லை என திட்டவட்டமாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாக தகவல் வெளியானது.
திமுக போராட்டம் :
தற்போது, சிஆர்பிஎப் பணியிட தேர்வில் சமவாய்ப்புடன் தமிழக மாணவர்கள் நடத்தப்பட வேண்டும் என திமுக தற்போது ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, திமுக இளைஞர்கள் மற்றும் மாணவரணி சார்பில் வரும் 17ஆம் தேதி தமிழகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், சிஆர்பிஎப் வீரர்களுக்கான காலிப்பணியிட தேர்வுகள் இந்தி – ஆங்கிலம் மட்டுமல்லாம் அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் மூலம் திமுகவினர் வலியுறுத்த உள்ளனர்.