மறைந்த தலைவர்கள் குறித்து பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளேன்- அமைச்சர் ஜெயக்குமார்!
கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ராஜாஜியின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரின் உருவப்படத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், மறைந்த தலைவர்களைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடது என உத்தரவிட்ட போதும், அதனை மீறி ஆ.ராசா செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், கருணாநிதி ஆட்சியைப் பற்றி பேச நிறைய தகவல்கள் உள்ளதாகவும், மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறாக பேசக்கூடாது என்பதால் அமைதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 2ஜி வழக்கு திமுகவினரின் தலையில் கத்தி தொங்குவது போல ஆபத்தானது என்றும், திமுகவினர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, சூரப்பா விவகாரம் குறித்து, முதல்வரிடம் ஆளுநர் எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.