திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள் என பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. 

திமுக பொதுக் குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உங்களில் ஒருவனான என்னை திமுக தலைவராக தேர்வு செய்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது அண்ணா அமர்ந்த இடம். கருணாநிதி கோலோச்சிய இடம். நான் அண்ணாவும் அல்ல, கருணாநிதியும் அல்ல. தொண்டர்களால் தான் நான் தலைவராக இங்கு நிற்கிறேன். நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன்.

திமுக பழுத்த மரமாக இருப்பதால் தானே கல் எறிகிறார்கள். திமுக பழுத்த மரம் மட்டுமல்ல கல் கோட்டை. வீசப்பட்ட கல்லை வைத்து கோட்டை கட்டுபவர்கள் திமுகவினர். புதிய நிர்வாகிகள் பலர் பொறுப்புக்கு வந்துள்ளார்கள். பழைய நிர்வாகிகள் பலர் இருப்பீர்கள். கடமையை செய்ய காலம் ஒரு கொடையாக இந்த பொறுப்பை உங்களுக்கு வழங்கி உள்ளது. பொறுப்பும், கடமையும் மிக மிக பெரியது.

அதிக மழை பெய்தாலும், மழை பெய்யாவிட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல் முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டவன் நான். ஒரு பக்கம் திமுக தலைவர் மறு பக்கம் தமிழ்நாடு முதல்வர். மத்தளத்திற்கு இரண்டும் பக்கம் அடி என்பது போல் உள்ளது எனது நிலைமை. இந்த சூழலில், என்னை மேலும் துன்பப்படுத்தும் வகையில் மூத்தவர்கள் ,அமைச்சர்கள் நடந்து கொண்டால் நான் யாரிடம் கூறுவது என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மையில் நாள்தோறும் நம்மவர்கள் யாரும் பிரச்சனையை உருவாக்கியிருக்க கூடாது என்று தான் கண்விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்குகிறது. என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

உங்களின் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. நாம் பயன்படுத்தும் சொல் மிக மிக முக்கியமானது. மிக மிக எச்சரிக்கையாக பேசுங்கள். நீங்கள் சொன்னத்தை வெட்டி, ஓட்டி பரப்புவார்கள். இது தான் எதிரிகளின் நோக்கம். இது முக்கியமான கால கட்டம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. யாரும் மெத்தனமாக இருக்க கூடாது. 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திமுகவை எதிர்ப்பதை விட அதிமுகவிற்கு எந்த காலத்திலும் வேறு கொள்கை இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சி இழந்து கிடக்கிறது. சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாத பாஜகவும், சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில் பொய் பரப்புகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்