“திமுக என்பது ஒரு ஆலமரம்”…விஜய்க்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி!
திமுக என்பது ஒரு ஆலமரம் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ” மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம். ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு பரப்ப முடியாது.
திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பெயரை சொல்லி சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலகூட்டம் தான் நம்மளோட அரசியல் முதல் எதிரி. ” என தவெக மாநாட்டு நிகழ்வில் தவெக தலைவர் விஜய் திமுக அரசை நேரடியாகவும், பாஜகவை மறைமுகமாகவும் கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் திமுக பற்றி விமர்சனம் செய்து மாநாட்டில் பேசியிருந்தது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கு ” யார் கல்லெறிந்தாலும் தாங்கிக்கொள்ளும் சக்தி திமுகவுக்கு உள்ளது” என பதில் அளித்திருக்கிறார்.
சென்னையில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது த.வெ.க. தலைவர் விஜய் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருக்கிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி ” திமுக என்பது ஒரு ஆலமரம் போன்றது. காய்த்த மரம்தான் கல்லடி படும். திமுக விமர்சனங்களை எதிர்கொள்ளும்.
யார் அரசியலுக்கு வந்தாலும் முதலில் திமுகவைத் தான் எதிர்ப்பார்கள். அப்படி விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடியை கொடுப்போம்” என விஜய் விமர்சித்து பேசியிருந்ததற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.