மதுரையில் திமுக உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை தவிர மற்ற அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் உண்ணாவிரதம் போராட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால், அங்கு மட்டும் திமுக உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் தேதி மாற்றப்பட்டது. மற்ற இடங்களில் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மதுரையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றைக்கு நடைபெறும் என தேதி மாற்றம் செய்யப்பட்டது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே நடைபெறும் என ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட திமுக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கு அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவ அணி நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.