மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தும் முயற்சியில் ஆளும் திமுக களமிறங்கியுள்ளது.

DMK MPs iniviting various state CMs

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி மறுவரையறையால் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக தொடர்ந்து மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி வருகிறது. தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது என பாஜக கூறியதே தவிர தொகுதி மறுசீரமைப்பு நடைபெறாது என அவர்கள் கூறவில்லை.

இப்படியான சூழலில் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பாஜக, நாம் தமிழர், தமாகா உள்ளிட்ட கட்சிகள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை, மற்றபடி, திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, தவெக, மநீம என பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .

இக்கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அதில், தொகுதி மறுசீரமைப்பில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு பாதிக்கப்படும் 7 மாநிலங்களில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளை சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த திமுக சார்பில் ஒரு அமைச்சர், ஒரு எம்பி அடங்கிய குழுக்கள் அனைத்து கட்சியையும் ஒருங்கிணைக்கும் என கூறப்பட்டது.

அதன்படி, வரும் மார்ச் 22ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடத்தப்படும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க  தற்போது மாநில கட்சிகளுக்கு திமுக சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஒடிசா, தெலுங்கானா, ஆந்திராவை தொடர்ந்து மேற்கு வங்கம் வரையில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

ஒடிசா :

நேற்று ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருவதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடகா :

பெங்களூருவில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்திக்க அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக எம்பி அப்துல்லா ஆகியோர் சென்றனர். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் பொன்முடி, இருவரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்றும், ஆலோசனை கூட்டத்திற்கு வருவதற்க்கு தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசம் :

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியையையும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவரான பல்லா சீனிவாசராவ் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்தனர் திமுக அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் திமுக எம்பி வில்சன்.

மேற்கு வங்கம் :

திமுக மாநிலங்களவை எம்பி கனிமொழி சோமு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையனுக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்திக்க அமைச்சர் கே.என்.நேரு தலைமையான குழுவும், கேரளாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவும் செல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்து வரும் ஆளும் திமுக அரசு, அடுத்து 2026 மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு இப்போது இருந்தே பல்வேறு மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்