திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது! மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது என அமித்ஷா பேசியுள்ளார்.

சென்னை : பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்த நிலையில், இன்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து, தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார். அப்போது, அந்த சந்திப்பில் அருகில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் (அடுத்த மாநிலத் தலைவர்) ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அப்போது அதிமுக கூட்டணி குறித்து அவர் பேசியதோடு திமுக குறித்து விமர்சனம் செய்தும் சில விஷயங்களை பேசினார். இது குறித்து அவர் பேசுகையில் ” என்னை பொறுத்தவரை திமுக இப்போது ஆட்சியில் இருக்கிற பிரச்னைகளை திசை திருப்ப மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. அதைப்போலவே, மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக பயன்படுத்துகிறது.
உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், திமுக ஆட்சியில் மணல் கடத்தல், டாஸ்மாக் முறைகேடு, கிராமப்புற வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களில் ரூ.39,755 கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை மறைக்க தான் மும்மொழி கொள்கை குறித்து பேசி வருகிறது. பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் 2000 படிக்கிறார்கள் தமிழில் பாடநூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா?
டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். அதைப்போல போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம்” எனவும் அமித் ஷா தெரிவித்தார்.