தி.மு.க. தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பொன். ராதாகிருஷ்ணன்..!
தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதி இன்று தன்னுடைய 95வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக கோபாலபுரத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தனது வாழ்த்துகளை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முதல்வராக 5 முறை பொறுப்பு வகித்து செயல்பட்டு வெற்றி பெற்றவரும் தமிழகத்தின் அரசியல் நிலையை தனது புத்திகூர்மையான செயல்பாட்டின் மூலமாக எத்திசைக்கும் இழுத்து செல்லும் வல்லமை படைத்தவருமான திராவிட முன்னேற்ற கழகத்தின் மரியாதைக்குரிய தலைவர் ஐயா கலைஞர் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான 95வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
100 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்ற இறைவன் அவருக்கு அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
அற்புதமான அவரது தமிழை கேட்கும் ஆவலோடு இருக்கின்ற கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவனாக அவரது குரல் கேட்க காத்திருக்கிறேன் என்பதை இந்த நல்ல நாளில் தெரிவித்து டாக்டர் கலைஞர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும் என மீண்டும் வாழ்த்தி எல்லாம்வல்ல அன்னை சக்தியின் அருள் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.