தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசு – ஓபிஎஸ் கண்டனம்

Default Image

தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அந்த பணிகளை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கத் துடிக்கும் திமுக அரசிற்கு கடும் கண்டனங்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசுத் துறை நிறுவனங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகப் பணியில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

அரசு துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 இலட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என போலி வாக்குறுதிகளை அளித்து அதன்மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஏற்கெனவே ஒப்பந்த அடிப்படையிலும், தற்காலிகமாகவும் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை வேலையிலிருந்து எப்படி நீக்குவது என்பதைப் பற்றித்தான் சதா சர்வகாலமும் சிந்தித்து வருகிறது.

புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலோ அல்லது காலிப் பணியிடங்களை நிரப்புவதிலோ கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இதற்கு மாறாக அனைத்தையும் தனியார்மயமாக்க திமுக அரசு துடித்து கொண்டியிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் வாரியத்தின் மூலம் சம்பளம் பெற்று வந்த ஒப்பந்த ஊழியர்களின் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது தி.மு.க. அரசு.

தற்போது ஈரோடு மாநகராட்சியின் பணிகளையும் தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளதாகவும், இதன் மூலம் ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான துப்புரவு மற்றும் இதர பணியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ஈரோடு மாநகராட்சிக்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பணிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில், 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது தி.மு.க. தலைவர் நடத்திய ஒரு நாடகம்தான் என் நினைவிற்கு வருகிறது. அரசுத் துறைகளிலும், அரசு சார்ந்த நிறுவனங்களிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களின் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

விடியலை நோக்கி’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று ஒரு குடும்பத்தின் விடியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் கொள்கையை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் உட்பட அனைத்துத் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்வதோடு, மக்கள் தி.மு.க.வை கை கழுவும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்