‘விடியா அரசே!நகைக்கடன் தள்ளுபடி,பெட்ரோல், டீசல் விலை குறைப்பை நிறைவேற்றிடு’ – இபிஎஸ் வலியுறுத்தல்!

Published by
Edison

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பற்றிய எந்த விவரமும் தமிழக அரசின் அரசாணையில் இல்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும்,நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பையும் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு மடிபவன் தான் விவசாயி என்று ஒரு நிதர்சனமான உண்மையாகும். வேளாண் பெருமக்கள், காலத்தே விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பயிர்க் கடனை, கூட்டுறவு கடன் சங்கங்கள் தனது உறுப்பினர்களுக்கு வழங்கும்.கூட்டுறவு கடன் சங்கங்கள், பருவ காலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக தேவைப்படும் நிதியை இருப்பில் வைத்திருப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, தற்போதைய முதலமைச்சர், அவரது வாரிசு மற்றும் திமுக நிர்வாகிகள் தமிழ் நாட்டில் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று பொதுமக்கள் எந்த வங்கியில் வேண்டுமானாலும் 5 பவுன் வரை அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும்; நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே நீங்கள் 5 பவுன் வரை அடமானம் வைத்து வாங்கிய நகைக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் மேடைக்கு மேடை பேசி, மக்களை நகைக் கடன் வாங்கத் தூண்டி வந்தனர்; ஆட்சியையும் பிடித்தனர்.

2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இருந்தே, இந்த பொய்யான வாக்குறுதிகளை அளித்து வந்தனர். இவர்களது பொய்யான வாக்குறுதிகளை நம்பி, வேளாண் பெருமக்கள், வியாபாரிகள், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் என்று பொதுமக்கள் பலரும் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் அடமானம் வைத்து நகைக் கடன் பெற்றுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகள், நகைக் கடன் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதியுடன், பருவ காலங்களில் விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக வழங்க ஒதுக்கப்பட்டிருந்த நிதியையும், நகைக் கடனுக்காக வழங்கிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிர்க் கடனை வழங்க போதுமான நிதி கூட்டுறவுக் கடன் சங்கங்களிடம் இல்லை என்றும்; எனவே, தமிழக அரசு உடனடியாக அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்துக் கூறினோம்.

இரு நாட்களுக்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன் நகைக் கடன் தள்ளுபடி என்று பெயரளவில் ஒரு அரசாணையை இந்த அரசு வெளியிட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக் கடன் தள்ளுபடி பற்றி எந்த விவரமும் இதில் இல்லை.

மேலும், போதுமான அளவு உரங்கள் இல்லை என்றும், பல இடங்களில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன என்றும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வருவதை சுட்டிக்காட்டி, உரங்களின் இருப்பை உறுதி செய்வதோடு, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கூறினோம்.

ஆனால், எப்போதும் போல் திமுக அரசு கூட்டுறவு சங்கங்களிடம் பயிர்கடன் வழங்கத் தேவையான அளவு நிதி உள்ளது என்றும், உரங்கள் இருப்பில் உள்ளன, அதிக விலைக்கு விற்கப்படவில்லை என்றும் தெரிவிக்கிறது.

ஆனால், உண்மையில் கூட்டுறவு கடன் சங்கங்களிடம் பயிர்க் கடன் வழங்க போதுமான நிதி இல்லாததால் விவசாயிகள், தனியாரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வந்துள்ளன. மேலும், உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், உரங்களுடன் தேவையற்ற பொருட்களை வாங்குமாறு கடைக்காரர்கள் விவசாயிகளை வற்புறுத்துவதாகவும் கடந்த 15 நாட்களாக தினமும் ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழகத்தில் தற்போது பருவ மழை அதிகம் பெய்துவரும் காரணத்தினால், பல மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

சென்ற ஆண்டு பருவமழை மற்றும் இயற்கைச் சீற்றத்தின் போது, அம்மாவின் அரசில், அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகளுடன், நானே பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்து, உடனுக்குடன் நிவாரணம் வழங்க உத்தரவிட்டதையும், பயிர்ப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், உடனுக்குடன் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நடமாடும் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் தண்ணீர் அகற்றப்பட்டு, வேளாண் பெருமக்களின் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு இதுவரை விவசாயிகளின் துயரத்தைத் தீர்க்கவும், வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றவும் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை; செய்திகளும் வெளிவரவில்லை.

03.11.2021 அன்று மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பல மாநிலங்கள், தங்கள் மாநிலத்தின் சார்பில் வசூலிக்கும் பெட்ரோலுக்கும், டீசலுக்குமான மாநில வாட் வரியினைக் குறைத்துள்ளது. ஆனால், இந்த திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்காமல், பெட்ரோலுக்கு மட்டும் சிறிதளவு மாநில வாட் வரியினைக் குறைத்துள்ளது. எனவே, தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, உடனடியாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்று இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக அகற்றவும்; பாதிப்படைந்த பயிர்களை கணக்கிட்டு, பயிர் இழப்பீட்டை உடனே அறிவிக்குமாறும்; தேவையான அளவு உரங்கள் சரியான விலையில் வேளாண் பெருமக்களுக்கு கிடைக்கவும்; கூட்டுறவு சங்கங்களில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பயிர்க் கடன் கிடைத்திடும் வகையில் சங்கங்களின் நிதி இருப்பை உயர்த்திடவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், திமுக-வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க வேண்டும் என்றும்; தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உட்பட அனைத்து வங்கிகளிலும் 5 பவுன் வரை அடமானம் வைத்து பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

நடிகர் அஜித்தின் செயலை பாராட்டிய சத்யராஜ்! எதுக்காக தெரியுமா?

சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…

1 hour ago

தவெக மாநாடு: நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்கும் விஜய்?

சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…

1 hour ago

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்.!

கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…

2 hours ago

“அமரன்” படக்குழுவிற்கு வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – தமிழ்நாடு பாஜக!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…

4 hours ago

அரசி எலிசபெத்தின் 77 ஆண்டுகள் பழமையான திருமண கேக்..பிரமாண்ட விலைக்கு ஏலம்!

ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…

4 hours ago

கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…

5 hours ago