“விடியா திமுக அரசே….விவசாயிகளுக்கு உரங்களை போர்க்கால அடிப்படையில் வழங்கு”- இபிஎஸ் வலியுறுத்தல்..!

Default Image

விடியா திமுக அரசு,நடப்பு பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாக தெரியவில்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாடு கட்டி போரடித்தால்;மாளாது செந்நெல் என்று

யானை கட்டி போரடிக்கும் காலம்;ஒன்று தமிழகத்தில் இருந்தது.

பண்டைய காலங்களில் வேளாண்மையில் தமிழகம் எவ்வாறு சிறந்து விளங்கியது என்பதை குறிப்பிடுவதற்கு நம் தமிழ்ப் புலவர்கள் கூறிய முதுமொழி இது. மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, 2011-ம் ஆண்டில், தமிழ் நாடு முழுவதும் 15 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு இருந்தது. தமிழ் நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவதே எனது முதல் வேலை என்று, தமிழ் நாட்டை மின்மிகை மாநிலமாக்கிய பெருமை மாண்புமிகு அம்மா அவர்களையே சாரும்.

வேளாண்துறை – அம்மா அரசு சாதனை:

தொடர்ந்து தமிழ் நாட்டை நீர் மிகை மாநிலமாக்கி, வேளாண்மையில் தமிழ் நாடு முதலிடம் பெறுவதற்கு அம்மாவின் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி, குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர் நிலைகள் தூர் வாரி சீரமைத்தது, டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிவரை கால்வாய்கள் தூர் வாரப்பட்டதால், குறித்த காலத்திற்குள் காவேரி நீர் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்தது. மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலமும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் குறித்த காலத்தில் பயிர்க் கடன் வழங்கியும், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயப் பெருமக்களுக்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கியும் அம்மாவின் அரசு வேளாண் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியது.

முக்கியமாக, விவசாயப் பெருமக்கள் காலத்தே பயிர் செய்ய வசதியாக, தேவையான விதை, உரம், யூரியா போன்ற இடுபொருட்களை குறித்த காலத்தில் தேவையான அளவு வழங்கியது.

வங்கிக் கணக்கில் பணம்:

மேலும், அறுவடை முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் எல்லாம். தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழக விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நெல்மணிகளும் விரைவாக கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.

திமுக ஆட்சி;விவசாயிகள் தவிப்பு:

ஆனால், கடந்த 5 மாத கால திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவுப் பணிகளுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கப் பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

முக்கியமாக, விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை என்று கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும், செய்திகள் வெளி வந்துள்ளன.

குறிப்பாக, டெல்டா பகுதிகள் தவிர்த்து, கிணற்றுப் பாசனப் பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உட்பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் சுமார் 60 சதவீதம் வேளாண் பெருமக்கள் பயிர் செய்துவிட்டு, தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில், பயிர்கள் நன்றாக வளர்வதற்கும், விவசாயிகளுக்கு இந்த பருவத்திற்குத் தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்த கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனை கடைகளிலும் தேவையான அளவு இல்லை என்றும், தேவைப்படும் உரத்தின் விலை, கடைக்கரார்களாலும், விற்பனையாளர்களாலும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது முதுமொழி.

அப்படி ஆடி மாதம் விதைத்த நெல்மணிகள் முளைத்து பயிராக வளரக்கூடிய சூழ்நிலையில், அதாவது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பயிரின் வளர்ச்சிக்கு உரங்கள் பெருமளவில் தேவைப்படும். அப்போது தான் தமிழர்களின் அறுவடை மாதமான தைத் திங்களில், விவசாயிகளின் தன்னலமற்ற உழைப்புக்கு ஏற்ற பலன் ‘அமோக விளைச்சல்’ என்று மக்களின் அத்தியாவசியத் தேவையான உணவுத் தேவை பூர்த்தி செய்யப்படும்.

எனவே தான், ஆண்டுதோறும் தமிழர்கள் தை முதல் நாளை பொங்கல் திருநாளாக, சீரும் சிறப்புமாகக் கொண்டாடுவார்கள். இதை கருத்தில் கொண்டே எப்போதும் அம்மாவின் அரசு, வேளாண் பருவத்தின் போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் விதை நெல், விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு தயார் நிலையில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கும்.

விடியா திமுக அரசு:

ஆனால், இந்த விடியா திமுக அரசோ, இந்தப் பருவத்திற்குத் தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாகவோ, தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ, அதற்குண்டான முயற்சிகளில் இறங்கியதாகவோ தெரியவில்லை. தமிழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது என்று ஊடகங்களிலும், செய்தித் தாள்களிலும் கடந்த இரண்டு நாட்களாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனவே, தமிழ் நட்டில் வேளாண் பெருமக்களுக்குத் தேவைப்படும் உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகள் உரத் தட்டுப்பாட்டால், குறிப்பிட்ட காலத்தில் பயிர்களுக்கு உரமிடாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலையைப் போக்கவும், இந்த விடியா அரசு விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi