உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது திமுக அரசு – பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து!
2024-24ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை அந்த துறையை சார்ந்த அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு கூடுதல் மானியம், கருப்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியானது.
இதுபோன்று, உற்பத்தி திறனை மேம்படுத்துதல், இழப்பீடு, நிவாரணம் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் இடம்பெற்றது. எனவே, இந்த வேளாண் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை கூறி வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வேளாண் பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை… எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் விமர்சனம்!
அதில், மாநிலத்து மக்களை மட்டுமல்ல மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சியாக திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது.
வேளாண்மையை உணவு தேவைக்காக அல்லது தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம். நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. ‘உழவர்கள்’ மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை.
தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம். மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை பாராட்டுகிறேன்.
2024-25 தமிழக வேளாண் பட்ஜெட்… அரசின் முக்கிய அறிவிப்புகள்.!
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது மத்திய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் டெல்லியில் தங்கிப் போராடிய விவசாயிகளின் எதிர்ப்பால் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. தற்போது மீண்டும் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
விவசாயிகளைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது. விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் மத்திய பாஜக அரசு உள்ளது. அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன்மூலம் திமுக அரசு உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என தெரிவித்துள்ளார்.