ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2.. என் மீதான வழக்கு நகைச்சுவையானது – அண்ணாமலை பேட்டி!
ஜூலை முதல் வாரத்தில் DMK Files Part 2 வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் திமுக சொத்து பட்டியல் என்று ஒரு விடியோவை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது, மேலும், அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, திமுகவினர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வந்தனர்.
இந்த சமயத்தில், அண்மையில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதன்பின், இன்று, திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக அண்ணாமலை மீது திமுக எம்பி டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இதுபோன்று, சொத்து பட்டியல் விவகாரம் தொடர்பாக அண்ணாமலை மீது திமுகவினர் தொடர்ந்து வழக்கு தொடுத்து வருகின்றனர். இதனால் அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர். பாலு என் மீது வழக்கு தொடர்ந்திருப்பது நகைப்புக்குரியது.
வழக்கிற்கு பயந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை நிறுத்தி கொள்ள மாட்டேன். ஜூலை முதல் வாரத்தில் 21 பேர் அடங்கிய திமுகவின் இரண்டாவது (DMK Files Part 2) சொத்து பட்டியல் வெளியிடப்படும் என அறிவித்தார். இரண்டாவது பட்டியலில் புதிய அமைச்சர்களின் சொத்து விவரங்கள் வெளியாகும் எனவும் தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அவர், தமிழக அரசு ஓராண்டில் 3 முறை ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை புதிய அமைச்சர் நிறைவேற்றுவார் என நம்புகிறோம். ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை பாஜக வரவேற்கிறது.
அதிகளவில் நிறுவனங்களை நடத்தி வரும் குடும்பம் என்பதால் டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பதவியா?. நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பது பழனிவேல் தியாகராஜனை மாற்றியது ஏன்? சிறப்பாக பணியாற்றிய பி.டி.ஆரின் இலாகாவை மாற்றியதற்கு ஆடியோ வெளியானது காரணமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.