இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!
இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 23-ம் தேதி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடந்த உள்ளதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என மொத்தம் மூன்று குழுக்களை அமைத்துள்ளது. அதன்படி தொகுதி பங்கீடு குழு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.இராஜா, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழக முழுவதும் சென்று மக்களிடம் கருத்த்துக்களை சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ம் தேதி தூத்துக்குடியில் தொடங்கிய சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் சென்னையில் மக்களிடம் கருத்த்துக்களை கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.