தவறுகளை கண்டுபிடித்து விடுகிறார் என்பதால் தான் ஆளுநரை நீக்கக் கோருகிறது தி.மு.க – வானதி சீனிவாசன்

Default Image

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கோருவதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக.கூட்டணி கட்சிகள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கை அளவிலும், செயல்பாட்டு அளவிலும் எதிர்ப்பது மக்களாட்சிக்கு சாவு மணி அடிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது. திமுகவுக்கு ஆளும் கட்சியாக இருக்கும்போது தான் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதெல்லாம் நினைவுக்கு வரும். எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னாரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் மூலம், அன்றைய அதிமுக அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை மக்கள் மறந்திருப்பார்கள் என தி.மு.க.வினர் நினைக்க வேண்டாம்.

ஆளுநர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டவர். எனவே, ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிதான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கென வகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.

சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கிலான, மத ரீதியான கருத்துகளை பொது வெளியில் ஆளுநர் பேசி வருகிறார். மக்கள் மனங்களில் வெறுப்பைத் தூண்டி, சமூக பதற்றத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் திட்டமிட்டு அவரது பேச்சுகள் அமைந்துள்ளன. திருக்குறளுக்கு மதச்சாயம் பூசுவது, திராவிட மரபையும், தமிழ்ப் பெருமையையும் விமர்ச்சித்து வருகிறார் என்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் குடியரசு தலைவரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதன்படியே அவர், பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். ஆளுநர் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில் ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

திமுக அரசுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், தி.மு.க.வினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநர் மீது வெறுப்பை கக்காமல், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்தின் நலனுக்காக அவருடன் திமுகஅரசு இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்