ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் அளித்த திமுகவினர்!
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆளுநரிடம் அளித்தார்.
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2வது பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உள்ளிட்டோர் சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து அளித்துள்ளனர். அதிமுக அமைச்சர்கள் மீது தாங்கள் அளித்துள்ள ஊழல் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், 5 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ மீது 9 புகார்கள் அடங்கிய ஆதாரத்துடன் கூடிய ஊழல் பட்டியல் தந்துள்ளோம். அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்கு இருக்கும் அதிகாரத்தின் படி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே முக ஸ்டாலின் கொடுத்த ஊழல் பட்டியலை, ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளார் என கூறியுள்ளார். 3ம் கட்ட பட்டியல் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இருக்காது என்றும் அப்போது இந்த அரசு இருக்காது எனவும் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 22ஆம் தேதி 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது திமுக.