பாரபட்சம் காட்டும் தேர்தல் ஆணையம்… ஐகோர்ட்டுக்கு சென்ற திமுக!
DMK: தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இறுதி வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகள் நிறைவு பெற்ற நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பாரபட்சம் காட்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆ.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் தேர்தல் ஆணையதிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதி உள்ளது. அதன்படி, அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரிசீலித்து அனுமதி வழங்க வேண்டும். ஆனால், திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிக்க தேர்தல் ஆணையம் 6 நாட்களாக காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
திமுகவின் சில விளம்பரங்களை சாதாரண காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் நிராகரிக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும். திமுக விளம்பரத்துக்காக முன் அனுமதி விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தை ரத்து செய்து 2 நாட்களில் அனுமதி அளிக்க உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மனுவை வரும் 15ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.