அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் திமுக – சீமான் காட்டம்

Default Image

ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என அரசு தெரிவித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளார். அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களது நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து ஆட்சியைப் பிடித்த திமுக, தற்போது அதனை நிறைவேற்ற முடியாது என்று கைவிரிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்துவந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது.

ஆனால், தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என் கோரிக்கை விடுத்தது வந்தனர். இதற்கிடையில் கடந்த 2021-ஆம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தச் சாத்தியமே இல்லை என்று சட்டப்பேரவையிலேயே திமுக அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்களை நம்ப வைத்து கழுத்தை அறுக்கின்ற கொடுஞ்செயலாகும். எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.

ஆகவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, தங்களின் உழைப்புக்கான வாழ்வாதார உரிமைக்காக 20 ஆண்டுக் காலமாகப் போராடிவரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்