தேர்தலுக்கு திமுக கூட்டணி தயார்.! எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள்.? முழு விவரம் இதோ…
DMK : மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு வரும் ஜூன் மாதம் 16ஆம் தேதியுடன் ஆட்சி பொறுப்பு நிறைவடைய உள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் 543 தொகுதிகளின் ரிசல்ட் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதில் தமிழகம் (39) மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் முதற்கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே சுறுசுறுப்பாக இருந்த திமுக கூட்டணி தொகுதி பங்கீடு வேலைகளானது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் விறுவிறுவென தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர் தேர்வை ஓரிரு நாட்களில் அறிவித்துவிடுவோம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் கூட்டணி போலவே இந்த முறையும், திமுக தலைமையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் , கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
Read More – டிஜிபி உட்பட 6 மாநில உள்துறை செயலாளர்களை பதவி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!
திமுக போட்டியிடும் தொகுதிகள் :
திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, ஸ்ரீபெரம்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி ஆகிய மக்களவை தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காண உள்ளனர்.
காங்கிரஸ் :
திமுக, காங்கிரஸ் கட்சி கூட்டணி தொடர்பாக கடந்த மார்ச் 9ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கபட்டது. அதனை தொடர்ந்து . இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், திருவள்ளூர் தனி தொகுதி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்ட்டுள்ளது.
Read More – மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் தமிழிசை.! ஆளுநர் பதவிகளுக்கு குட்’பை’.!
மதிமுக :
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது திருச்சி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ மகன் துரை வைகோ போட்டியிட உள்ளார். இந்த முறையும் திமுக சின்னத்தில் போட்டியிட உள்ளனரா அல்லது மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட உள்ளானாரா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) :
கடந்த 2019 தேர்தல் சமயம் ஒதுக்கப்பட்டது போல இந்த முறையும் கடந்த 29.02.2024ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்ட நிறைவில் திமுக கூட்டணி தலைமையில் , CPM கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் , மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் அக்கட்சி போட்டியிட உள்ளது என கடந்த மார்ச் 12ஆம் தேதி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அதில், சு.வெங்கடேசன் மற்றும் சச்சிதானந்தம் ஆகியோர் போட்டியிட உள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மதுரை மற்றும் கோவையில் CPM கட்சி போட்டியிட்டு வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கமியூனிஸ்ட் கட்சி :
கடந்த 2019 தேர்தல் சமயம் ஒதுக்கப்பட்டது போல இந்த முறையும் கடந்த 29.02.2024ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனை கூட்ட நிறைவில் திமுக கூட்டணி தலைமையில் , CPI கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் , நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதியில் அக்கட்சி போட்டியிட உள்ளது என கடந்த மார்ச் 12ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் இறுதி செய்யப்பட்டது. நாகையில் வை.செல்வராஜ் மற்றும் திருப்பூர் தொகுதியில் கே.சுப்புராயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி :
திருமாவளவன் தலைமையிலான விசிக கட்சி இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம் முதலே 4 தொகுதிகளை கேட்டது. இறுதியில் இரண்டு தனி தொகுதிகள் மட்டுமே திமுக தலைமையில் ஒதுக்கப்பட்டது. பாஜக எதிர்ப்பு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட காரணங்களை ஏற்றுக்கொண்டு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட உள்ளது. கடந்த முறை ஒரு தொகுதியில் பானை (திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம்) சின்னமும், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இருந்தது விசிக.
Read More – வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் – தேர்தல் ஆணையம்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் :
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக எம்பியாக இருக்கும் நவாஸ் கே.கனி மீண்டும் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
கொங்கு மக்கள் தேசிய கட்சி :
திமுக கூட்டணியில் கொ.ம.தே.கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த முறை புதிய முகத்திற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் :
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த முறை 1 மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தையை தொடங்கியது. இறுதியில் கடந்த மார்ச் 9ஆம் தேதி திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக மநீம கட்சி பிரச்சாரம் செய்வது என்றும் 2025 மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் ஒரு தொகுதி ஒதுக்கப்படுவது என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.