“திமுக – பாஜக., கள்ள உறவு இல்ல, அது நல்ல உறவு கூட்டணி தான்.!” சீமான் பளீச்!
திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி அல்ல, நேரடி கூட்டணி தான் வைத்துள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக கட்சிகள் குறித்தும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பல்வேறு கருத்துக்களை கூறினார்.
திமுக ஆட்சி பற்றி சீமான் கூறுகையில், “எங்கு போனாலும் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என மக்கள் கூறுவதாக முதல்வர் கூறுகிறார். அப்படியே என்னோடு வாருங்கள். மனுவோடும் கண்ணீரோடும் காத்திருக்கும் மக்களை காட்டுகிறன். ஆட்சி சூப்பர் என ஆட்சியாளர் சொல்ல கூடாது. மக்கள் கூற வேண்டும். நீங்களே கூட்டிக்கொண்டு வருகிறீர்கள். அவர்களுக்கு காசு கொடுத்து கூற சொல்கிறீர்கள் அவர்கள் கூறுகிறார்கள்.” என திமுக அரசு பற்றி விமர்சனம் செய்தார் சீமான் .
அடுத்து தேர்தல் கூட்டணி குறித்து கூறுகையில் , “கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். 2026இல் நான் தனித்து போட்டி தான். 117 ஆண்கள் , 117 பெண்கள் அதில் 100க்கும் மேற்பட்டவர்கள் இளம் வயதினர் தான். என் கால்களை நம்பி தான் என் பயணம் தொடரும்” எனக் கூறினார்.
திமுக – பாஜக பற்றி கூறுகையில், “பாஜக எதிர்ப்பு கொள்கை கொண்ட முதலமைச்சர்கள் சந்திரசேகர ராவ் (முன்னாள் தெலுங்கானா முதல்வர்) மகள் மீது ED ரெய்டு வருது, ஜார்கண்ட் முதலமைச்சர் மீது ED ரெய்டு வருது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது ரெய்டு வருது, ஆனால் இவர்கள் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) மீது வரல. அப்படியென்றால் இவர்கள் கறைபடியாத கைகள் கொண்டவர்களா? இவர்கள் (திமுக – பாஜக) இடையே கள்ள உறவு எல்லாம் இல்லை. எல்லாம் நல்ல உறவு தான்.
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பிரதமரை நேரில் சந்திக்க முடியுமா? ஆனால் , காலையில் அப்பா (மு.க.ஸ்டாலின்) பிரதமரை சந்திக்கிறார். மாலை மகன் (உதயநிதி) சந்திக்கிறார். அப்படியென்றால் இதை எப்படி மறைமுக கூட்டணி என கூறமுடியும். இது நேரடி கூட்டணி தான். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்த போது, ஜெயலலிதா முகம் பதித்த நாணயம் வெளியிட்டார்கள். அதற்கு பாஜகவினர் வரவில்லை. ஆனால் கூட்டணியில் இல்லாத திமுக கலைஞர் முகம் பதித்த நாணயம் வெளியிடும் போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார் என்றால், யார் மிக நெருக்கமாக இருக்கிறார்கள்?” என பாஜக – திமுக பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.