சட்டப்பேரவையில் திமுக vs அதிமுக : “கவனமாக இருங்கள்.,” “எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்..,”
கூட்டணி கணக்குகளை பார்த்துக்கொள்ளுங்கள் என திமுக அமைச்சரும், எங்கள் கூட்டணியை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என எடப்பாடி பழனிசாமியும் மாறி மாறி தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் இன்று பட்ஜெட் மீதான தனது விளக்கத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். அப்போது தமிழக அரசு அறிவித்த மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். ஒரு மடிக்கணினி 10 ஆயிரம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அது தரமானதாக இருக்குமா? என கேள்வி எழுப்பினார்.
ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ஒரு மடிக்கணினி ரூ.20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக திறந்த டெண்டர் கோரப்படும். அதனடிப்படையில் ஒதுக்கீடு தொகையில் மாற்றம் இருக்கும். தரமான மடிக்கணினிகள் தான் மாணவர்ளுக்கு வழங்கப்படும் எனக் கூறினார்.
அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகள் :
அதன் பிறகு பேசிய அமைசர் தங்கம் தென்னரசு, அதிமுக கூட்டணி கணக்குகள் பற்றி தனது விமர்சனத்தை நகைச்சுவையாக பேரவையில் பதிவு செய்தார். அவ்வாறு அவர் பேசுகையில், அதிமுகவின் கூட்டல் கழித்தல் கணக்குகளை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஒருவர் வேறு எங்கோ உட்கார்ந்து உங்களுடைய எதிர்க்கலாம், உங்கள் தொண்டர்களின் எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போக செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு கணக்குப் போட்டு கொண்டு இருக்கிறார்.
இந்த மடிக்கணினி விவகாரத்தில் நீங்கள் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதை போல, உங்கள் மடியில் இருக்கும் கனத்தை பறிப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் மீதுள்ள உரிமையில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். என கூறினார்.
சிரித்த வானதி சீனிவாசன்..,
அப்போது பாஜக எம்எலஏ வானதி சீனிவாசன் சிரித்ததை அமைச்சர் பார்த்துவிட்டு பேசுகையில், நான் பேசும் போது வானதி சீனிவாசன் மிகுந்த மகிழ்ச்சியோடு சிரிக்கிறார்கள். அப்படியானால் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்றுதான் அர்த்தம். என நகைச்சுவையாக தனது விமர்சனத்தை முன்வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
முதலமைச்சர் வாழ்த்து :
அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதிமுகவுக்கான கூட்டல், கழித்தல் கணக்குகளை சாணக்கியத்தனத்துடன் எங்கோ இருப்பவர்கள் போடுகிறார்கள் என தங்கம் தென்னரசு பேசி இருந்தார். மடிக்கணினி கணக்கு போல இல்லாமல் மடியில் உள்ள கணத்தை தங்கமணி கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். தங்கமணி கூட்டல், கழித்தல் கணக்கில் ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துக்கள்” என தனது விமர்சனத்தையும் முதலமைச்சர் முன்வைத்தார்.
இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு :
இந்த பேரவை நிகழ்வுகள் முடிந்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கணக்கு பற்றி நிதியமைச்சர் நிறைய பேசினார். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம். பட்ஜெட் கணக்கை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள். ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம்.
நீங்க எப்படியெல்லாம் இருந்தீர்கள் என சற்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் என்பது எதிரிகளை கூட்டணி அமைத்து வீழ்த்துவது தான். கொள்கை எப்போதும் எங்களுக்கு ஒன்று தான். திமுக அப்படியல்ல. எங்கள் கொள்கையோடு ஒத்த கொள்கை உள்ளவர்களிடத்தில் நாங்கள் கூட்டணி அமைப்போம் என கூறுகிறார்கள். அப்படியென்றால் ஒரே கட்சியாக இருக்கலாமே? ஏன் தனித்தனி கட்சி?
எங்களுக்கு வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். காவிரி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கினோம் நீங்களும் அதுபோல நிதி தரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீங்கள் ஒன்றும் அவ்வாறு அழுத்தம் கொடுக்கவில்லை. எங்கள் நிலைப்பாடு திமுக அரசை அகற்ற வேண்டும் என்பது தான் . திமுவை தவிர மற்றவர்கள் எங்கள் எதிரி இல்லை ” என எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.