தொகுதிப் பங்கீடு: மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு திமுக பேச்சுவார்த்தை..!
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு அமைத்து வருகிறது. அந்த வகையில் திமுக, அதிமுக, மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தங்களின் தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அறிவித்துள்ளனர்.
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை!
நேற்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் மாலை 3 மணிக்கு நடைபெற்றது. திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழு காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
பேச்சுவார்த்தைக்கு பின்செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “முதல்கட்ட ஆலோசனையில் இருதரப்பும் ஈடுபட்டது. கூட்டணியின் மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை குறித்த தேதியை அறிவிப்போம். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை வழங்கப்பட்ட தொகுதிகளே மீண்டும் வழங்கப்படுமா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, இவ்வளவு சீக்கிரம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், அப்புறம் ஒன்றுமே இல்லையே. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் வரும் பிப்ரவரி 3-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதே நேரத்தில் பிப்ரவரி 4-ம் தேதி மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.