“முதலமைச்சர் தலையிட வேண்டும்.,” சாம்சங் ஊழியர்களுக்கு திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் ஆதரவு.!

காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சாம்சங் ஊழியர்களை, திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

K Balakrishnan (CPM) - Mutharasan (CPI) - Thirumavalavan (VCK)

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தர மறுத்து வருகிறது. அதனால், தொடர் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் போராட்டம் தொடர்ந்த காரணத்தால், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.

Read More – சாம்சங் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் என்ன பிரச்சனை.? விரிவாக விளக்கிய தங்கம் தென்னரசு.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் மாநிலச் செயலாளர் முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் கூட்டாக தொழிலாளர்களை சந்தித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர்.

கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்) :

கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்) செய்தியாளர்களிடம் பேசுகையில், ”  சங்கத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இதனை அமைச்சரிடம் ஏற்கனவே தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர். அரசு பதிவு செய்துதரவில்லை என்ற காரணத்தால் அவர்கள் நீதிமன்றம் சென்று விட்டனர். முறைப்படி அரசு சங்கத்தை பதிவு செய்து கொடுத்தால், அவர்கள் வழக்கை வாபஸ் பெற்றுவிடப் போகிறார். இதையெல்லாம் நினைத்து தான் நாங்கள் முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இது ஒரு சாதாரண கோரிக்கை. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை கோரிக்கை. அதனை நிறைவேற்றிக் கொடுங்கள். நாங்கள் எதையும் வற்புறுத்தவில்லை. இதில் சுமூகமான முடிவை அரசு பெற்றுத் தர வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

தமிழ்நாடு முழுக்க இருக்கும் காவல்துறைக்கு முதலமைச்சர் தான் பொறுப்பு. அதற்காக ஒரு காவல் நிலையத்தில் அத்துமீறி நடக்கும் சம்பவத்திற்கு எல்லாம் முதலமைச்சர் பொறுப்பாக முடியாது. ஏதோ ஒரு காவல் நிலையத்தில் அத்துமீறல் நடந்தால் அதற்கு முதல்வர் எப்படி பொறுப்பாவார்.? ஆனால், இந்த மாவட்ட (காஞ்சிபுரம்) காவல்துறை ஏதோ சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவான துறை போல் செயல்படுகிறது. இல்லையென்றால், பந்தலை பிரிக்க வேண்டிய அவசியம் என்ன.? 400 பேரை கைது செய்து மண்டபத்தில் அடக்க வேண்டிய அவசியமில்லை. ஊழியர்கள் மேல் என்ன குற்றச்சாட்டு இருக்கிறது.? ஒன்றுமில்லை., ஒட்டுமொத்தமாக காவல்துறையை குற்றம் சொல்ல நாங்கள் விரும்பவில்லை. காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையை தான் நாங்கள் குற்றம் சாட்டுகிறோம். ” என்று அவர் பேசினார்.

திருமாவளவன் (விசிக) :

திருமாவளவன் (விசிக) கூறுகையில், ” அமைதியாக அறவழியில் போராடிக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி வெளியிட வேண்டும். இந்த பிரச்சனையில் முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும். முதல்வர் தலையிட்டால்தான் இந்த பிரச்சனைக்கு சுமுகமான முடிவு கிடைக்கும்.

அந்த வகையில் தோழர் குறிப்பிட்டது போல, தோழமை கட்சி என்ற முறையில் ஓரிரு நாட்களில் முதலமைச்சரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனை குறித்து வலியுறுத்த எண்ணி இருக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று அதனை ஒரு காரணமாக கூறாமல்., அரசு நேரடியாக இதில் முடிவெடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுத்தால் வழக்குச் செயலிழந்து போகும். அரசுக்கு அந்த அதிகாரம் இருக்கிறது. தொழிலாளர் இணை ஆணையருக்கு பதிவாளர் என்ற பொறுப்பு இருக்கிறது. அவருக்கு சங்கத்தை பதிவு செய்யும் அதிகாரம் இருக்கிறது. அது சட்டபூர்வமானது.

அதில் அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. இதுதான் இங்கு பிரச்சினையின் முக்கிய காரணியாக இருக்கிறது. அரசு இந்த தயக்கத்தை தவிர்த்து, தேக்கத்தை உடைத்து, சங்கத்தை பதிவு செய்ய முன்வர வேண்டும். அந்த சங்கம் பின்னாளில் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறுவனத்திற்கு எடுத்து கூறும். இத்தனை ஆண்டுகள் தொழிற்சங்கத்தை அனுமதிக்காதது ஒரு அடக்கு முறையாகும். சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக நங்கள் பேசவில்லை. ஆனால் அதன் அடக்குமுறைக்கு எதிராக இருக்கிறோம். சங்கம் வைத்துக்கொள்வது ஜனநாயக உரிமை உள்ளது. அதனை அதிகாரிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.” என்று அவர் பேசினார்.

முத்தரசன் (சிபிஐ) :

முத்தரசன் (சிபிஐ) பேசுகையில், ” சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடங்கி ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது. இதில் சுமுகமான  தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இன்றும் அந்த நம்பிக்கையோடு தான் இருக்கிறோம். ஒரு நிறுவனத்தை அழித்துவிட வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. சாம்சங் நிறுவனமாக இருந்தாலும் சரி., இனி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அந்த நிறுவனங்கள் நன்றாக வளர வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அதே நேரத்தில், 1500 பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்களுக்கான ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ள முழு உரிமை சட்ட ரீதியாக உள்ளது. 16 ஆண்டு காலமாக சங்கம் வைக்க வேண்டும் என்ற முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. தொழிலாளர் உடன் நிறுவனம் நல்ல முறையில் இணக்கமாக இருந்திருந்தால் இப்போது கூட அவர்கள் சங்கம் வைக்க கேட்டிருக்க மாட்டார்கள். தற்போது தங்களை தற்காத்துக் கொள்ள தொழிலாளர்கள் சங்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்கிறார்கள். சங்கம் வைத்துக் கொண்டால் தான் தொழிலாளர்கள் தங்கள் பிரச்சனைகளை அந்த சங்கம் வாயிலாக கூற முடியும். தனிப்பட்ட முறையில் ஒரு தொழிலாளர் கூறினால் அவர் நிர்வாகத்தால் பழிவாங்கும் நடவடிக்கைக்கு உள்ளாவார். ” என்று அவர் கூறினார்.

இவ்வாறாக திமுக கூட்டணி கட்சித் தலைவர்களான திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் சாம்சங் தொழிலாளர்களை சந்தித்துவிட்டு தங்கள் ஆதரவு கருத்துக்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். மேலும், இப்பிரச்சனை குறித்து ஓரிரு நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்