“முதலமைச்சருக்கு நன்றி.!” – திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள்.!
சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் சுமூக முடிவு ஏற்பட நடவடிக்கை எடுத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்கள் , தொழிற்சங்கம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு மதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் அண்மையில் தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் உடன்பாடு எட்டப்பட்டு தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
தொழிலாளர்களுக்கும், நிறுவனத்திற்கும் இடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தாமோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி இப்போராட்டத்தில் உடன்பாடு எட்டினர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திமுக கூட்டணி கட்சிகளான விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதலமைச்சருடனான இந்த சந்திப்பு முடிவடைந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து இச்சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தனர். விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், ” சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் ஒரு மதத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது அது தீவிரமானதை அடுத்து , விடுதலை சிறுத்தைகள் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து தொழிலாளர்களை சந்தித்தோம். அப்போது முதலமைச்சரை நேரில் சந்தித்து தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைப்பதாக கூறியிருந்தோம்.
அதன்படி அப்போது நாங்கள் நேரம் கேட்டிருந்தோம். அந்த சமயம் எதிர்பாரா விதமாக முரசொலி செல்வம் காலமான காரணத்தால், நேரம் ஒதுக்க முடியாமல் போனது . அதனடிப்படையில் இன்று நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து நாங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் முதலமைச்சரை நேரில் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துக்கூறினோம். அவர் அனைத்தையும் பொறுமையாக கேட்டறிந்தார்.
போராட்டத்தின் போது தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், போராட்டம் தொடர்பாக தோழர் பாலகிருஷ்னன், முத்தரசன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யவும் கேட்டிருந்தோம். அதனை பரீசிலிப்பதாக கூறியுள்ளார்.
அடுத்து, மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்க்ளை நிரப்ப வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் கோரிக்கை மனுவை முதல்வரிடத்தில் அளித்துள்ளார். அனைத்தையும் பரீசிலப்பதாக கூறியுள்ளார். சாம்சங் தொழிலாளர் விவகாரத்தில் சுமூகமான முடிவு எட்ட கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், மின்கட்டண உயர்வால் சிறுகுறு தொழில்முனைவோர், பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் அதனை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்றோம். நீதிமன்றத்தில் சாம்சங் தொழிலாளர்கள் சார்பில் சங்கம் அமைப்பதற்கு வழக்கு நடைபெறுகிறது. அதில் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த சூழலிலும் தொழிலாளர் நலத்துறை இருந்துவிடக் கூடாது என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். ” என விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ” 4 அமைச்சர்களை அனுப்பி தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்திற்கு சுமூக தீர்வு கண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. சங்கம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அதனை விரைந்து தீர்க்க கோரிக்கை வைத்துள்ளோம்.” என்றும் கூறினார்.