திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவில்.? இபிஎஸ் ‘முக்கிய’ தகவல்.!
திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வரும் கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சேலம் : கூட்டணியில் உள்ள கட்சிகளோடு திமுகவுக்கு புகைச்சல் ஏற்பட்டுள்ளது என்றும், 2026இல் கூட்டணி மாறலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ” திமுக கூட்டணி வலுவாக தான் இருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகைய ஆரம்பித்து விட்டது (சாம்சங் ஊழியர்கள் விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு). அடுத்து காங்கிரஸ் சார்பில் திமுகவின் நடவடிக்கை தொடர்ந்தால் நாங்களும் பேச வேண்டியிருக்கும் என கண்டன அறிக்கை வந்துவிட்டது. (காமராஜர் பற்றி திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார்)
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே தேர்தல் பற்றிய கோரிக்கைகளை கூற ஆரம்பித்து விட்டார்கள். திமுக கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. ” எனக் கூறினார். திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவுக்கு வந்தால் அதனை கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், ” திமுக கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் ஏற்போமா என்பது பற்றி இப்போது கூற முடியாது. அது தேர்தல் நேரத்தில் கள நிலவரம் பார்த்து தான் கூற முடியும். இன்னும் 18 மாதங்கள் அதாவது ஒன்றரை வருடங்கள் இருக்கிறது. இப்போது எதையும் சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். 2026 தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். ” என கூட்டணி குறித்த கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார்.