இனி “தேமுதிக அலுவலகம் ‘கேப்டன் ஆலயம்’என்று அழைக்கப்படும்” – பிரேமலதா அறிவிப்பு.!
சென்னை : மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தேமுதிக தலைமை அலுவகலத்தில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா விஜயகாந்த்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. மதுரையில், ஆகஸ்ட் 25, 1952ம் ஆண்டு அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த அவர், தமிழ் சினிமாவின் கேப்டனாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கருப்பு எம்ஜிஆர் என பெயரெடுத்தவர்.
குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், என்றென்றும் மக்கள் நினைவில் இருக்கும். மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடபட்டது.
சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின், வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் மனமுடைந்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின், அலுவலகத்தில் விஜயகாந்த்-ன் 8 அடி கொண்ட முழு உருவச் சிலையை திறந்து திறந்து வைத்தார். அப்பொழுது சிலையை கட்டி அணைத்து கண்ணீர் விட்டு அழுதார். இதனையடுத்து, கலங்கிய கண்களுடன் மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா, “தேமுதிக தலைமை அலுவலகம், இன்று முதல் ‘கேப்டன் ஆலயம் ‘என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும். புதியதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.