தடையை மீறி பிரேமலதா தலைமையில் பேரணி… தொண்டர்களால் நிறைந்த கோயம்பேடு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது.
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும் திரண்டு அதிகாலை முதலே மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
விஜயகாந்த் நினைவு தினத்தை குரு பூஜையாக கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேடு நினைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு குரு பூஜை நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக, தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா தலைமையில், மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதி பேரணி நடத்த திட்டமிடபட்டது.
அந்த வகையில், பேரணிக்காக தேமுதிக தொண்டர்கள் கூடிருந்த நிலையில், அனுமதி இல்லை என காவல்துறை மறுப்பு தெரிவித்தனர். இதனால், பேரணிக்கு அனுமதி கோரி மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாருடன் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பொழுது, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயம்பேட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தேமுதிகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது தேமுதிகவினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன் காரணமாக, கோயம்பேட்டில் சிறிது நேரமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டளது. இவ்வாறு காவல் துறை அனுமதி மறுத்த போதிலும், தடையை மீறி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் தேமுதிகவினர் பேரணி தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் வாயிலில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் நோக்கி, கருப்பு நிற சட்டையில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக செல்வதால், கோயம்பேடு பகுதியில் தற்பொழுது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.