காரில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு.! இது தான் உங்களுக்கு ரூட்டு…
தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்வோருக்கு அமைச்சர் சிவசங்கர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
சென்னை : வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், இன்று (21/10/2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையை சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருக பணீந்திரரெட்டி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 4,900 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11,176 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக” தெரிவித்தார்.
மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி கார் மற்றும் இதர வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்வோருக்கு அமைச்சர் சிவசங்கர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
காரில் செல்வோர் கவனத்திற்கு
அதன்படி, கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.