கனமழை எதிரொலி: இன்று, நாளை திருச்செந்தூர் செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆட்சித்தலைவர்!

மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இன்றும் நாளையும் திருச்செந்தூர் கோவிலுக்கு வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

tuticorin collector

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கன‌மழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது.

அதன்படி, இன்று (14.12.2024) காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி, மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி வெள்ள நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அது மட்டும் இல்லாமல், கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த போக்குவரத்து சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கு இன்று (14.12.2024 ) மற்றும் நாளை (15.12.2024)  வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்