திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங்!
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை கவச உடை அணிந்து கலெக்டர் ஷ்ரேயா சிங் பார்வையிட்டுள்ளார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் பொழுது திருச்செங்கோடு வருவாய் உதவி கலெக்டர் இளவரசி, மருத்துவ அலுவலர் தேன்மொழி, கொரோனா சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சத்தியபாமா, தடுப்பூசி பிரிவு மருத்துவர் மோகனா ஆகியோரும் உடனிருந்துள்ளனர். அப்பொழுது பச்சிளம் குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் மற்றும் பொது நோயாளிகள் பிரிவு ஆகியவற்றிற்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் ஷ்ரேயா, அதன் பின் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து உள்ளார்.
மேலும் ரத்த வங்கிக்கு சென்று அங்கு நடைபெறும் பணிகள் குறித்தும் பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து கொரோனா சிகிச்சை வார்டுக்கு முழு கவச உடையுடன் சென்ற கலெக்டர் அங்கு கொரோனா சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளிடம் குறைகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்ததுடன் நோயாளிகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா நோயாளிகளிடம் சிகிச்சை முறையோ அல்லது வேறு ஏதேனும் குறைகளோ இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.