MaduraiHC: மாசு ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை – ஐகோர்ட் கிளை
சுற்று சூழல் மாசு ஏற்படும் விதமாக தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நெல்லையில் போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய உடனே அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த நபர் தொடர்ந்த அவசர வழக்கில் மாசு ஏற்படுத்தும் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. தாமிரபரணி ஆறு ஏற்கனவே கடுமையாக மாசடைந்துள்ள நிலையில் இதுபோன்ற சிலைகளை கரைக்க அனுமதிக்க மாட்டோம்.
மனுதாரர் தயாரித்த சிலைகளை வீட்டில் வைத்து வழிபட அனுமதிக்கலாம். இருப்பினும், மனுதாரர் தயாரித்துள்ள விநாயகர் சிலைகளை வாங்குவோர், அதனை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி தர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் வைத்து வழிபட விநாயகர் சிலை வாங்குபவர்களின் முழு விவரங்களையும் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வருகின்றனர் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.