அதிமுக பொதுச்செயலாளர் வழக்கை நிராகரித்தது தவறு – சசிகலா
பொதுச்செயலாளர் பதிவில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை நிராகரித்தது தவறு என சசிகலா தரப்பு வாதம்.
அதிமுக பொதுச்செயலாளர் பதிவில் இருந்து தம்மை நீக்கியதை எதிர்த்த வழக்கை சிபில் கோர்ட் நிராகரித்தது தவறு என சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக அப்போது அறிவித்தது.
இதன்பின் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 செப்டம்பர் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பொதுச்செயலாளர் இல்லாமல் அதிமுக பொதுக்குழுவை கூட்டியது செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில், பொதுச்செயலாளர் பதிவில் இருந்து தன்னை நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யவும் கோரியிருந்தார்.
இதையடுத்து சசிகலாவின் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல் செய்தனர். இருவர் மனுவையும் ஏற்று சசிகலா வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்த வழக்கை நிராகரித்தது தவறும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவை ஏற்று தன்னுடைய வழக்கை சிபில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு எனவும் சசிகலா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.