பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு …!
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தில் லட்சுமி மற்றும் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பீரங்கி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக பென்னலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியுள்ளனர். அப்பொழுது அங்கு இருந்த வெடிகுண்டுகளை பார்த்துவிட்டு, வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
அப்பொழுது, இவை பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள் எனவும், ஏற்கனவே கடந்த 1996-ல் ஒரு பீரங்கி குண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இரண்டு பீரங்கிக் குண்டுகளையும் வருவாய்த்துறையினர் கும்மிடிப்பூண்டியில் உள்ள வெடிகுண்டுகள் செயலிழக்கும் இடத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் அப்பகுதியில் வேறு ஏதேனும் பீரங்கி குண்டு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடத்துவதற்கு காவல் துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.