ஃபெஞ்சல் புயல் எதிரொலி: கடலூரில் விடிய விடிய கொட்டிய கனமழை.. பணியில் பேரிடர் மீட்பு குழு!
கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்
கடலூர்: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் தரைப் பகுதியில் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதுவரை 18 செ.மீ., மழை பதவாகியுள்ளது. கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே, கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் குடியிருப்புகளை வெள்ளம் நீர் சூழ்ந்துள்ளது.
தற்பொழுது, கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஏரியின் அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.