500 அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம்!
Election2024: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் 500 அரசு ஊழியர்கள் ஏமாற்றம்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற உள்ளதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
அந்தவகையில், சைதாப்பேட்டையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட தாடண்டர் நகர் பகுதியில் சுமார் 5,000 அரசு ஊழியர்கள் இருப்பதாகவும், இதில் சுமார் 500 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் புகார் கூறப்படுகிறது.
எனவே ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த 500 அரசு ஊழியர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். தலைமை செயலகம், எழிலகம், குறளகம் என பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியவில்லை என வேதனை தெரிவித்தனர். இதுபோன்று தமிழகத்தில் சில பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.