மனைவியுடன் கருத்து வேறுபாடு – 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட கணவர்!
தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக சேலத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வரக்கூடிய நபர் தான் முருகன். முருகனுக்கும் அவரது மனைவி முருகேஸ்வரிக்கும் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் 9 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
தனது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக விரக்தி அடைந்த முருகன் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு குழந்தைகள் இருவரையும் கொலை செய்து விட்டு அதன் பின் அழுது கொண்டே பேசியவாறு, இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள், என்னை கொல்லனும் என்று முடிவு பண்ணிட்டீங்க, கொன்னுட்டீங்க என்று கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை தனது உறவினர்களுக்கு எல்லாம் அனுப்பிவிட்டு தனது போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து முருகனின் மனைவி மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருமண மண்டபத்தின் பின்புறம் அவரது இரண்டு குழந்தைகளும் முருகனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மூவரின் உடலையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.